100 - தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs)

 1 - 65 / 100 - தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs)


"தமிழ் வழி கல்வி"



தமிழ் பழமொழிகள்
(Tamil Proverbs)

பழமொழிகளும் அதன் அர்த்தங்களும் !

பழமொழி என்பது தமிழ் மொழி பேசுபவர்களிடையே வழக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு செய்கையை குறிக்கவோ, ஒரு செயலுக்கு விளக்கம் தரவோ சொல்லப்படுகிறது. பழமொழிகள் அனுபவத்துடன் சேர்த்து, அறிவுரையும் சொல்லும் தமிழ்ப் பழமொழிகள் இங்கு தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

31 - 65 /100
& 1  - 30 / 100.



பழமொழிகளும் அதன் அர்த்தங்களும் !


31.     "ஊசி கொள்ளப்போய்த் துலாக் கணக்கு பார்த்ததுபோல".

பொருள்
ஊசி வாங்கச் சென்றவன் அதன் எடையை நிறுத்துக் காட்டச் சொன்னானாம்!


32.     "ஈர வெங்காயத்திற்கு இருபத்து நாலு புரை எடுக்கிறது".

பொருள்
வெங்காயம் புதிதாக, ஈரமாக இருந்தாலும் அவன் அதிலும் இருபத்து நான்கு தோல்கள் உரித்திடுவான்.


33.     "சட்டி சுட்டதும், கை விட்டதும்"

பொருள்
ஏண்டா அடுப்பில் இருந்த மண் கலையத்தை இறக்கும்போது கீழே போட்டாய் என்றால், சட்டி சுட்டுவிட்டது என்றதுபோல.


34.    "நீண்டது தச்சன், குறைந்தது கருமான்".

பொருள்
தச்சனுக்கு மரம் நீளமாக இருக்கவேண்டும்; கொல்லனுக்கோ இரும்பு சின்னதாக இருக்கவேண்டும்.


35.     "பசி வந்தால் பத்தும் பறக்கும்".

பொருள்
பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்றும் இந்தப் பழமொழி வழங்குகிறாது.


36.     "எங்கள் ஆத்துக்காரனும் கச்சேரிக்குப்போய் வந்தான்".

பொருள்
என் கணவனும் நீதி மன்றத்தில் வேலை செய்கிறார்.


37.     "சங்கிலே விட்டால் தீர்த்தம், மொந்தையிலே விட்டால் தண்ணீர்".

பொருள்
இரண்டுமே தண்ணீர்தான் என்றாலும் இருக்கும் இடத்துக்குத் தக்கவாறு மதிக்கப்படும்.


38.     "நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல".

பொருள்
கிணறே நேற்றுதான் வெட்டியது; அப்படியிருக்க அதில் முந்தாநாள் முதலையைப் பார்த்ததாகச் சொல்வது எங்ஙனம்?


39.     "தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது".

பொருள்
நடைமுறை அனுபவங்களுடன் கற்றுக்கொடுக்கப்படாத கல்வி உடலில் சூடுபோட்டாலும் மனதில் ஏறாது.


40.     "கரும்பை விரும்ப விரும்ப வேம்பு".

பொருள்
ஒரு இனிய பொருளை மேலும் மேலும் விரும்பி உபயோகிக்கும்போது அது திகட்டிவிடுகிறது.


41.     "ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாள் ஆக்குகிறான்".

பொருள்
ஒரு சிறிய விஷயத்தைக் கண் காது மூக்கு வைத்துப் பெரிதாக்கி அதையும் ஒரு கதையாக்கிக் கூறுதல்.


42.     "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி?"

பொருள்
ஊரில் உள்ள யாசகர்களில் மிகவும் குறைவாக கவனிக்கப்படுகிறவன் பிள்ளையார் கோவிலில் உட்கார்ந்திருக்கும் ஆண்டி.


43.    "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து."

பொருள்
இருப்பதே போதும் என்று திருப்தியுற்ற மனமே அது தொட்டதெல்லாம் பொன்னாக்கும் மருந்து ஆகும்.


44.    "ஞானமும் கல்வியும் நாழி அரிசியிலே."

பொருள்
ஞானத்துக்கும் கல்விக்கும் உணவு மிக முக்கியம்.


45.     "நடந்தால் நாடெல்லாம் உறவு, படுத்தால் பாயும் பகை."

பொருள்
நடந்து செல்பவனுக்கு நாட்டில் நண்பர்கள் பலர் கிடைப்பார்கள். ஒன்றும் செய்யாமல் சோம்பேறியாகப் பாயில் படுத்தூங்குகிறவனை அந்தப் பாயும் வெறுக்கும்.


46.    "குந்தித் தின்றால் குன்றும் மாளும்."

பொருள்
குன்றளவு சொத்து உள்ளவனும் வேலையில்லாமல் வெறுமனே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் அவன் சொத்து விரைவில் கரைந்துவிடும்.


47.     "கொல்லைக்காட்டு நரி பல்லைக் காட்டினது போல."

பொருள்
தோப்பில் உள்ள நரி பல்லைக் காட்டிப் பயமுறுத்தியதுபோல.


48.    "இலவு காத்த கிளி போல."

பொருள்
பருத்தி மரத்தின் காய் பழுத்தடும் என்று உண்ணக் காத்திருந்த கிளி போல.


49.     "ஐயா கதிர்போல, அம்மாள் குதிர்போல."

பொருள்
மிராசுதார் ஐயா தன் வயலில் விளையும் நெற்கதிரைப்போல் ஒல்லியாக இருக்கிறார், அவர் மனைவியோ வீட்டில் உள்ள நெற்குதிர்போல் இருக்கிறாள்.


50.     "கும்பிட்ட கோவில் தலைமேல் இடிந்து விழுந்ததுபோல."

பொருள்
மிகவும் மதித்து நம்பியிருந்த ஒருவன் கைவிட்டது குறித்துச் சொன்னது.


51.     "இருந்தும் கெடுத்தான், செத்தும் கெடுத்தான்."

பொருள்
அவன் இருந்தபோதும் துன்பந்தான், இறந்தபோதும் துன்பந்தான்.


52.     "ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்."

பொருள்
ஒரு கொம்பில்லாத விலங்குகூட ஏழை என்றால் அவன்மேல் பாயும்.


53.     "குரங்குப்புண் ஆறாது."

பொருள்
குரங்கு தன்மேலுள்ள புண்ணை ஆறவிடுமா?


54.     "கஞ்சி வரதப்பா என்றால் எங்கே வரதப்பா என்கிறான்."

பொருள்
இவன் தான் வணங்கும் காஞ்சீபுர வரதராஜப் பெருமாளைக்குறித்துச் சொன்னது அங்கிருந்த பிச்சைக்காரன் காதில் அவன் குடிக்கும் கஞ்சி ஊற்றுபவர்கள் வருவவதுபோல் விழுந்தது.


55.     "ஊரார்வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே."

பொருள்
தன் பொருளைவிட மற்றவர் பொருளை உபயோகிப்பதில் தாராளம்.


56.     "குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து, தேளும் கொட்டினால்,     என்ன கதி ஆகும்?"

பொருள்
குரங்கு என்பது ஒரு நிலையில் நில்லாது மனம் போனபோக்கில் ஆடும் விலங்கு. அது கள்ளும் குடித்து, பின் அதற்குப் பேய் பிடித்து, அதன்பின் அதனைத் தேளும் கொட்டிவிட்டால், குரங்கின் கதி என்ன?

நம் மனமே குரங்கு. கள் குடிப்பது ஆணவ மலத்தால் நாம் செய்யும் செயல்கள்; பேய் பிடிப்பது நாம் மாயை என்கிற மலத்தால் அவதியுறுவதைச் சொல்வது; நம்மைத் தேள்கொட்டுவது கன்ம/கரும மலம்: நாம் முன் செய்த வினைகளின் பயன். இந்த மூன்று மலங்களாலும் பாதிக்கப்பட்ட ஒரு ஜீவாத்மாவின் கதி என்ன ஆகும்?


57.    "தூர்த்த கிணற்றைத் தூர்வாராதே."

பொருள்
கிணற்றைத் தூர்த்து முடிவிட்டபின், மீண்டும் அதைத் தோண்டித் தூர்வாரினால் பயன் உண்டோ?

முடிந்துபோன விஷயத்தை மீண்டும் கிளறுவது குறித்துச் சொன்னது.


58.     "அம்மி மிடுக்கோ, அரைப்பவள் மிடுக்கோ?"

பொருள்
அம்மியில் அரைப்பதன் ஆற்றல் அம்மிக்கல்-குழவியில் உள்ளதா, அரைக்கும் பெண்ணின் வலிமையில் உள்ளதா?


59.     "இமைக்குற்றம் கண்ணுக்குத்தெரியாது."

பொருள்
இமையின் குறைபாடுகளை அதன் கீழேயே உள்ள கண்ணால் பார்க்கமுடியாது.


60.     "அற்றது பற்றெனில் உற்றது வீடு."

பொருள்
உலகப்பொருட்களில் உள்ள பற்று நீங்கினால் மோட்சம் சம்பவிக்கும்/புலப்படும்/உறுதிப்படும்.


61.     "குப்பையும் கோழியும் போல குருவும் சீஷனும்."

பொருள்
கோழி குப்பையைக் கிளறித் தான் உண்ணுவதைத் தேடுவதுபோல, சீடன் குருவிடம் விசாரணை மூலம் தன் உண்மையை அறிந்துகொள்ளவேண்டும்.


62.     "தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும்."

பொருள்
ஒவ்வொருவருடைய வினைகளும் அவரை நிச்சயம் பாதிக்கும், ஓடுமேல் உள்ள அப்பத்தால் வீடு பற்றி எறிவதுபோல.


63.     "இல்லது வாராது, உள்ளது போகாது."

பொருள்
நீ செய்யாத வினைகள் உன்னை அண்டாது, நீ செய்த வினைகள் அதன் விளைவுகளை அனுபவிக்கும்வரை நீங்காது.


64.      "மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?"

பொருள்
மண் குதிரையில் ஆற்றை கிடந்ததால், உடனே மண் கரைந்து, ஆற்றில் மாட்டி கொள்ள நேரிடும்.


65.     "தெய்வம் காட்டும், ஊட்டுமா?"

பொருள்
தெய்வம் வழிகாட்டும், ஆனால் அந்த வழியில் நாம் தானே போகவேண்டும்? தெய்வமே என்கையைப் பிடித்துக்கூட்டிச் செல்லவேண்டுமென்றால் எப்படி?





1.    "உப்பிட்டவரை உள்ளளவும் நினை".

பொருள்
உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே.


2.     "எங்கே திருடினாலும் கன்னக்கோல் வைக்க ஒரு இடம் வேண்டும்".

பொருள்
திருடனும் தன்வீட்டில் திருடமாட்டான் என்பது மறை பொருள்.


3.     "கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்".

பொருள்
ஒரு மஹாகவியின் தாக்கம் அவர் வீட்டில் உள்ள பொருட்களிலும் பயிலும் என்பது செய்தி.


4.     "ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான்".

பொருள்
தந்தை தொழிலும் பழக்கமும் மகனுக்கு எளிதில் வரும்.


5.     "சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி".

பொருள்
முன்பின் பழக்கம் இல்லாதவர்களைக் கூட்டாக வைத்துக் கொண்டால் காரியத்தையே கெடுத்து விடுவார்கள்.


6. "சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்கமாட்டாதவன் ஞானத்தை எப்படி அறிவான்?".

பொருள்
சோறு உண்ணும்போது அதில் உள்ள சிறு கல்லை எடுத்துவிட்டு உண்ண முனையாதவன் எப்படி ஞானம் என்பது என்னவென்று அறியமுடியும்?


7.     "உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?".

பொருள்
உள்ளூரில் ஒரு சிறு செயல் செய்யத் தெரியாதவன், முன்பின் தெரியாத ஒரு பெரிய ஊருக்குப் போய் அங்கு ஒரு பெரிய செயலை செய்து காட்டுவானா?


8.    "கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது".

பொருள்
ஒரு சின்ன அளவை ஒரே தடவையில் பெரிய அளவை கொண்ட கொள்கலத்தைப் போல அதிக அளவு அளக்க முடியாது.


9.     "ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று".

பொருள்
பிரம்மச்சாரியாகத் தனியாக இருப்பவன் வாழ்க்கை வண்டியோட்டுபவன் ஒருவனது வாழ்க்கை போல.


10.    "எள்ளுதான் எண்ணைக்குக் காய்கிறது. எலிப் புழுக்கை என்னத்துக்கு காய்கிறது?".

பொருள்

ஒன்றுக்கும் உதவாதவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள் மத்தியில் உலவுவது எதற்காக? என்பது செய்தி.


11.     "கல மாவு இடித்தவள் பாவி, கப்பி இடித்தவள் புண்ணியவதியா?".

பொருள்
ஒரு கலம் மாவினை நான் இடித்துச் சலிக்க, அவள் கொஞ்சம் கப்பியை எடுத்து இடித்துவிட்டுப் பேர்வாங்கிக் கொள்கிறாள்.


12.     "ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க".

பொருள்
இரை தேடி வருவது ஒரு தாய்க் குருவிதான். அதற்கு ஒன்பது குஞ்சுகள் வாய் திறக்கின்றன!


13.      "இடித்தவள் புடைத்தவள் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாள்".

பொருள்
நெல்லை இடித்தும் புடைத்தும் அரிசியாக்கிப் பின் சோறாக வடித்துப் போட்டவளாகிய நான் குத்துக்கல்லாக இங்கிருக்க, நான் செய்ததையெல்லாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு எல்லாம் கொடுக்கிறான்.


14.     "இட்டவர்கள், தொட்டவர்கள் கெட்டவர்கள், இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்".

பொருள்
கொடுத்தவர்கள், உதவியவர்கள் எல்லோரையும் கெட்டவர்கள் என்று ஒதுக்கிவிட்டுப் புதிதாக வேலைக்கு வந்தவர்களை நல்லவர்கள் என்று சொல்லுவது


15.     "பட்டும் பாழ், நட்டும் சாவி".

பொருள்
நான் பாடுபட்டதெல்லாம் வீணாயிற்று. நான் நட்ட பயிரும் நெல்மணிகள் திரளாமல் பதராயிற்று.


16.     "கொடுக்கிறது உழக்குப்பால், உதைக்கிறது பல்லுப்போக".

பொருள்
 ஒரு உழக்குப் பால் மட்டுமே கொடுக்கும் பசு உதைப்பதென்னவோ பல் உடையும் அளவிற்கு!


17.     "ஒருநாள் கூத்துக்கு மீசை சிரைக்கவா?"

பொருள்
ஒருநாளைக்கு மட்டும் போடும் பெண் வேஷத்துக்காக நான் என் மீசையை இழக்கவேண்டுமா?


18.     "இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம் !".

பொருள்
இவ்வளவு ஆரவாரமான வழிபாட்டின் பிரசாதம் வெறும் கூழ்தானா?


19.     "கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்".

பொருள்
கைகள் காய்த்துப் போகும்வரை தண்ணீர் விட்டால்தான் பாக்கு மரங்கள் காய்க்கும்.


20.    "சாகிற வரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்".

பொருள்
வைத்தியன் தன் முயற்சியை ஒருவனது மரணம் வரையில் கைவிடமட்டான்; பஞ்சாங்கம் பார்த்துத் திதி சொல்லும் ஒருவன் செத்த பின்னரும் விடமாட்டான்!


21.     "காலைச் சுற்றின பாம்பு கடிக்காமல் விடாது".

பொருள்
நச்சரிக்கும் ஒருவன் தான் கேட்பதைப் பெறாமல் விடமாட்டான்.


22.     "ஒரு அடி அடித்தாலும் பட்டுக்கொள்ளலாம், ஒரு சொல் கேட்க முடியாது".

பொருள்
அவர் அடித்தாலும் பரவாயில்லை, ஏசினால் தாங்கமுடியாது.


23.     "உங்கள் உறவிலே வேகிறதைவிட, ஒருகட்டு விறகிலே வேகிறது மேல்".

பொருள்
சுற்றமும் நட்பும் தாங்கமுடியாத தொல்லைகள் ஆகும்போது பாதிக்கப்பட்டவன் சொன்னது: உங்கள் உறவைவிட மரண்மே மேல்!


24.    "தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா? ".

பொருள்
ஒழுக்கம் விழுப்பம் தந்தாலும் அது ஒருவனுக்குத் தானே வரவேண்டும். வாயிலும் கையிலும் கண்டிப்புக் காண்டினால் வராது.


25.    "கோல் ஆட, குரங்கு ஆடும்".

பொருள்
எவ்வளவுதான் கற்றிருந்தாலும் ஆடு என்றால் குரங்கு தானே ஆடாது. கோலைக் காட்டி ஆட்டினால்தான் ஆடும்.


26.     "கடையச்சே வராத வெண்ணெய், குடையச்சே வரப்போகிறதோ? ".

பொருள்
நன்றாகக் கடைந்தபோது திரளாத வெண்ணெய் லேசாகக் கிண்டும்போது வந்துவிடுமோ?


27.     "மேய்த்தால் கழுதை மேய்ப்பேன், இல்லாதேபோனால் பரதேசம் போவேன்".

பொருள்
எனக்கு மற்ற பிராணிகளை மேய்ப்பது சரிப்படாது, எனவே நான் மேய்க்கவேண்டுமென்றால் கழுதைதான் மேய்ப்பேன். அல்லது என்னை விட்டுவிடு, நான் தீர்த்த யாத்திரை போகிறேன்.


28.     "ஒற்றைக் காலில் நிற்கிறான்".

பொருள்
விடா முயற்சியுடன் ஒரு கடினமான செயலைச் செய்பவன் குறித்துச் சொன்னது.


29.     "ஒன்று ஒன்றாய் நூறா? ஒருமிக்க நூறா? ".

பொருள்
நூறு ஒரு ரூபாய்கள் உள்ள கட்டின் மதிப்பு ரூபாய்களை எண்ணித்தான் தெரியுமா அல்லது பார்த்த உடனேயே தெரியுமா?


30.     "முடி வைத்த தலைக்குச் சுழிக் குற்றம் பார்க்கிறதா? ".

பொருள்
தலையில் முடி சூட்டியபின் அந்தத் தலையில் சுழியை ஆராய முடியுமா?



இன்னும் நம் வழக்கில் உபயோகப்படுத்தும் பழமொழிகள் நிறையவே இருக்கிறது. அதைப் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.


Share this article link with your friends and relatives if you like it.


**இந்த கட்டுரையின் இணைப்பை நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


By
Talents Infinite Talents. ( TIT )
“Be the change you want to see globally,”


OUR

TO JOIN US / CHAT WITH US: click the below link.




"ஒளியாய் ஒளிர்வோம்"



" Let's Shine like a Light "



Comments