மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு, கவிதைகள், புகைப்பட தொகுப்புகள், பொன்மொழிகள்.


மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு, கவிதைகள், புகைப்பட தொகுப்புகள்,  பொன்மொழிகள்..


மகாகவி பாரதியார்




மகாகவி பாரதியார் 

பெயர் -    சுப்பையா (எ) சுப்பிரமணியன் 

பிறப்பு -    டிசம்பர் 11, 1882 

பிறந்த இடம் -    எட்டயபுரம், தமிழ்நாடு 

மற்ற பெயர்கள் -     முண்டாசுக் கவிஞன், சக்தி தாசன், பாரதியார், 

மகாகவி இருப்பிடம் -    திருவல்லிக்கேணி, சென்னை 

பணி -    கவிஞர், எழுத்தாளர், விடுதலை போராட்ட வீரர், பத்திரிக்கையாசிரியர்

 பெற்றோர் -    சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள் 

துணைவியார் பெயர் -    செல்லம்மாள் 

பிள்ளைகள் -    தங்கம்மாள், சகுந்தலா 

முக்கிய படைப்புகள் -    கண்ணன் பாட்டு, குயில் பாட்டு. பாஞ்சாலி சபதம் மற்றும் பல 

இறப்பு -     செப்டம்பர் 11, 1921


மகாகவி பாரதியார் துணைவியார் செல்லம்மாள் 



நவீன தமிழ் கவிதைகளுக்கு தகப்பன் தான் நம் மீசை கவிஞ்சன் பாரதி. தமிழ், தமிழர் நலன், பெண் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக ஒரு நூற்றண்டிற்கு முன்னரே தன் கவிதையால் உரக்க கதியவன் தான் நம் தேசிய கவிஞன். மகாகவி சுப்ரமணிய பாரதியார் ஒரு கவிஞனாக மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், நல்ல பத்திரிக்கையாசிரிராகவும் இருந்தவர். “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று பெண்ணுரிமைக்காக பாடியவரும் இவர் தான், “சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;” என்று தீண்டாமை ஒழிப்பு குறித்து பாடியவரும் இவர் தான். தம் எழுத்துக்கள் மூலமாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய நம் முண்டாசு கவிஞ்சன் பாரதியாரின் வாழ்க்கை வரலாறை பற்றி இங்கு காண்போம் வாருங்கள்.

பாரதியார் பிறப்பு 

மகாகவி பாரதியார், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும், 1882 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி , திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் மகனாக பிறந்தார். அவருக்கு தம் பெற்றோரோர் இட்ட பெயர் சுப்பிரமணி.


பாரதியார் இளமை பருவம் 

5 வயதிலேயே தன் தாயை இழந்த பாரதியார், ஏழு வயது முதலே கவிதையால் கர்ஜிக்க தொடங்கினார். இவருக்கு 11 வயது இருக்கும்போது இவரது கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் பாராட்டி இவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார் எட்டயபுர மன்னர். அன்றில் இருந்து இவர் பெயர் சுப்பிரமணிய பாரதியார் என்றானது.


பாரதியார் திருமண வாழ்க்கை 

1897 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி பாரதி தம் வாழ்நாளில் மறக்க முடியாத தேதியாக மாறியது. 14 வயது மட்டுமே நிறைவடைந்த அவருக்கு 7 வயது சிறுமியான செல்லம்மாளோடு நடந்தேறியது பாலியல் திருமணம். இது போன்ற தவறுகள் இனி நடக்கவே கூடாது என்று அவர் அப்போது எண்ணினார் என்னவோ தெரியவில்லை. பின்னாளில் தன் கவிதைகள் மூலம் பாலியல் திருமணத்திற்கு எதிராக பொங்கி எழுந்தார் மகாகவி பாரதியார்.


பாரதியார் கற்ற மொழிகள் 

16 வயதில் தன் தந்தையையும் இழந்த பாரதியார் அதன் பிறகு வறுமையில் வடித் தவித்தார். பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு காசிக்கு சென்று அலகாபாத் பல்கலை கழகத்தில் சம்ஸ்கிருத மொழியையும், இந்தி மொழியையும் கற்றறிந்த. இது தவிர ஆங்கிலம், வங்காளம் போன்ற பிற மொழிகளிலும் தனிப் புலமை பெற்று விளங்கினார் பாரதியார். இத்தனை மொழிகளில் புலமை பெற்றதால் தான், “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தெளிவாக சொன்னார் மகா கவி பாரதியார்.


பாரதியார் செய்த பணி 

4 ஆண்டுகள் காசியில் இருந்துவிட்டு தமிழகம் திரும்பினார் பாரதியார். பிறகு எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞ்சராக பணியாற்றினார். அழகிய தமிழ் கவிதைகள் பலவற்றிற்கு சொந்தக்காரரான பாரதியாரின் எழுத்துக்கள் முதல் முதலில் 1903 ஆண்டு அச்சில் வந்தது. அதன் பிறகு மதுரை சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார் பாரதியார். பிறகு சுதேயசிய மித்திரன் பத்திரிகையின் துணை ஆசிரியராக பொறுப்பேற்றார்.


இந்திய விடுதைலை போராட்டத்தில் பாரதியார் ஆற்றிய பணி 

தன்னுடைய தீராத சுதந்திர தாகத்தை தணிக்க 1905 ஆண்டு முதல் அரசியலில் ஆர்வம் காட்டினார் மகாகவி பாரதியார். அதன் பிறகு கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ சிதம்பரம் பிள்ளை போன்றோரோடு நெருங்கிய தொடர்ப்பு ஏற்பட்டது. அதன் பிறகு கல்கத்தாவில் தாதாபாய் நவ்ரோஜி தலைமையில் நடைபெற்ற மகா சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போது சுவாமி விவேகானந்தரின் சிஷ்யர் நிவேதிக்கா தேவியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவரிடம் ஆசி பெற்ற பாரதியார், அவரை தம் ஞயான குருவாக ஏற்றுக்கொண்டார்.


1907 ஆம் ஆண்டில் “இந்தியா” என்னும் வார ஏட்டையும் “பால பாரதம்” என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார் பாரதியார். இந்தியா விடுதலை போராட்டத்தில் பாரதியார் தீவிரமாக ஈடுபட துவங்கினார். தாம் ஆசிரியராக இருந்த இந்தியா என்னும் பத்திரிகையை விடுதலைக்காக பயன்படுத்தினார். சுதந்திரப் போராட்டத்தில், பாரதியாரின் பாடல்கள் காட்டுத்தீயாய் பரவி தமிழர்களை வீறுகொள்ள செய்தது. கத்தியின்றி ரத்தமின்றி  யுத்தமொன்று வருகுது சத்தியத்தின் நித்தியத்தை நம்பும்யாரும் சேருவீர் 


பாரதியாருக்கு கைது வாரென்ட் 

பாரதியாரின் சுதந்திர எழுச்சி மிக்க பாடல்களும் கேலி சித்திரங்களும் சுதந்திர போராட்டத்திற்கு கை கொடுத்து வழி நடத்தியது. இதனால் “இந்தியா” பத்திரிகை மீது பிரிட்டிஷ் அரசின் பார்வை விழுந்தது. மேலும் பாரதியாருக்கு கைது வாரென்ட் பிறப்பித்ததாக தகவல் வந்தது. அதனால் தன் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரியில் தலைமறைவாக வாழ்ந்தார் பாரதியார். 1908 ஆம் ஆண்டு முதல் “இந்தியா” பத்திரிக்கை புதுவையில் இருந்து வெளி வர துவங்கியது.

தன் பேணா எழுத்துக்கள் மூலம் பெரும் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்தார் பாரதியார். அவரது பத்திரிக்கை பிரச்சாரத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பத்திரிகையின் செல்வாக்கும் படிப் படியாக அதிகரித்தது. இதனை கவனித்த பிரிட்டிஷ் அரசு, அந்த பத்திரிகையை படிக்க தடை விதித்தது. இதனால் சென்னையில் பிறந்து புதுவையில் வளர்ந்த “இந்தியா” பத்திரிகையும் பாதை அறியாது பாதியில் நின்றது.


புதுவையில் பாரதியாரின் கவிதை 

பத்திரிக்கை முடங்கியதே தவிர பாரதியாரின் புலமை முடங்கவில்லை. அந்த காலகட்டத்தில் தான், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலியின் சபதம் போன்ற அமர கவிதைகள் பலவற்றை இயற்றினார் பாரதியார். அதோடு 1912 ஆம் ஆண்டு பகவத் கீதையை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டார் பாரதியார்.


பாரதியார் கைது 

1918 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து வெளி ஏறி பிரிட்டிஷ் எல்லையில் காலடி எடுத்து வைத்த உடன் கைது செய்யப்பட்டார் பாரதியார். 

34 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டார் பாரதியார். விடுதலையானதும் தம் மனைவியின் ஊரான கடையம் என்னும் ஊரில் குடியேறினார். அடுத்த இரண்டு ஆண்டுகளையும் கடயத்திலேயே செலவிட்டார்.


வறுமையில் பாரதியார் 

கடையதில் இருந்த காலகட்டத்தில் பாரதியாரை வறுமை மீண்டும் சூழ்ந்துகொண்டது. தம் நிலையை விளக்கி சீட்டு கவிதை ஒன்றை எட்டயபுர மன்னருக்கு அனுப்பினார் பாரதியார். அனால் மன்னரிடமிருந்தும் எதிர் பார்த்த உதவி கிடைக்கவில்லை. உலகில் எல்லா உயிரினங்களும் பசியில்லாமல் வாழவேண்டும் என்ற எண்ணம் பாரதியாரிடம் அந்த வறுமை காலத்திலும் மேலோங்கி இருந்தது. வீட்டில் தன் மனைவி சமைக்க வைத்திருக்கும் சிறிதளவு அரிசியை கூட காக்கைக்கும் குருவிகளுக்கு வாரி இறைத்து விட்டு, தான் பசியோடு வாழ்ந்த நாட்கள் ஏறலாம். இத்தகையை உணர்வுள்ள ஒருவரால் தான், “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று கவி பாட முடியும்.

வறுமையில் கூட தன்மானத்தோடு தான் வாழ்ந்தார் அந்த புரட்சி தமிழன். பொதுவாக கொடுக்கிற கை மேலேயும் வாங்குகிற கை கீழேயும் இருக்கும். ஆனால் அந்த இலக்கணத்தையும் மாற்றினார் நம் தேசிய கவி. ஒருமுறை தன்னுடைய பணக்கார நண்பர் ஒருவர், தட்டில் பணத்தையும் பட்டாடையையும் வைத்து பாரதியாரிடம் கொடுத்தாராம். ஆனால் பாரதியோ, தட்டை உம்மிடமே வைத்துக்கொள் என்று கூறி , தமது கைகளால் அந்த தட்டில் இருந்ததை எடுத்துக்கொண்டாராம். தன்னுடைய கை எதற்காகவும் தாழ்ந்துவிட கூடாது என்பதில் கவனமாய் இருந்துள்ளார் பாரதியார்.


காந்தி, பாரதியார் சந்திப்பு 

வறுமையில் சில காலம் வாழ்ந்த பாரதியார், 1919 ஆம் ஆண்டு மீண்டும் சென்னைக்கு வந்தார். அப்போது ராஜாஜியின் வீட்டிற்கு ஒரு முறை சென்றபோது அங்கு மகாத்மா காந்தியை சந்தித்தார். இந்தியாவின் மும்மூர்த்திகளான ராஜாஜி, காந்தி மற்றும் மகா கவி பாரதியார் சந்தித்தது அதுவே முதலும் கடைசியும் ஆகும்.


பாரதியார் இறப்பு 

1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம், தான் வழக்கமாக செல்லும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார் பாரதியார். அங்கு யாரும் எதிர்பாரா விதமாக அந்த கோவில் யானை அவரை தூக்கி எரிந்தது. அதனால் தலையிலும் கையிலும் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. அதோடு அவருக்கு இது ஒரு பேரதிர்ச்சியாக இருந்தது. அதனால்  அவர் நோய்வாய்ப்பட்டார். சில நாட்களுக்கு பிறகு அவர் யானை தந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டபோதும் வயிற்று கடுப்பு நோயால் பாதிக்கப்  பட்டார். மருந்துகளை சாப்பிட மறுத்த அவர் தனது 39 வது வயதில், 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி இவுலக வாழ்வை நீத்தார்.


இளம் வயதில் இத்தகைய பெரும் கவி இறந்தது ஒரு சோகம் என்றால், அதை விட பெரும் சோகம் ஒன்றை “கவிராஜன் கதை” என்னும் நூலில் கவி பேரரசு வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். பாரதியாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மிகச்  சிலரே என்பதை குறிப்பிடுகையில், “இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவாக இருந்ததாம் தோழர்களே, மகாகவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ! அவன் உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் இல்லையே!” என்று குறிப்புபிட்டுள்ளார்.

தான் இறந்தாலும் தன் கனவுகள் அனைத்தையும் நம்மிடமே விட்டு சென்றார் அந்த தீர்க்க தரிசி. “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிய பாராதியை தீர்க்க தரிசி என்று தானே நாம் கூற வேண்டும்.


பாரதியார் எழுதிய நூல்களில் சில 

பாஞ்சாலி சபதம், பாரதி அறுபத்தாறு, தேசிய கீதங்கள், விநாயகர் நான்மணிமாலை, கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, தோத்திரப்பாடல்கள், ஞானப்பாடல்கள், புதிய ஆத்திச்சூடி, பதஞ்சலியோக சூத்திரம், சந்திரிகையின் கதை, ,விடுதலைப் பாடல்கள், சின்னஞ்சிறு கிளியே, பொன்வால் நரி, பாரதியார் பகவத் கீதை, ஞானரதம், நவதந்திரக் கதைகள், ஆறில் ஒரு பங்கு.


பாரதியார் நினைவுச்சின்னங்கள் :

பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரத்தில், அவருக்கு மணிமண்டபமும், திருவுருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. எட்டயபுரத்திலும், சென்னை திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த வீட்டினை, பாரதியார் நினைவு இல்லமாக மாற்றி அதை இன்றுவரை தமிழ்நாடு அரசு பராமரித்து வருகிறது. அதோடு அங்கு பொதுமக்களும் சென்று பார்வையிடும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.


Photo Collections











Bharathiyar House / museum - Chennai.






Ettaiyapuram Palace


Bharathiyar House Ettaiyapuram.















பாரதியார் -சில கவிதைகள்


பாப்பா பாட்டு – பாரதியார் கவிதை


ஓடி விளையாடு பாப்பா, – நீ 

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா, 

கூடி விளையாடு பாப்பா, – ஒரு 

குழந்தையை வையாதே பாப்பா.


சின்னஞ் சிறுகுருவி போலே – நீ 

திரிந்து பறந்துவா பாப்பா, 

வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ 

மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா. 


கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக் 

கூட்டி விளையாடு பாப்பா, 

எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு 

இரக்கப் படவேணும் பாப்பா.


பாலைப் பொழிந்துதரும் பாப்பா, – அந்தப் 

பசுமிக நல்லதடி பாப்பா; 

வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது 

மனிதர்க்குத் தோழனடி பாப்பா. 


வண்டி இழுக்கும்நல்ல குதிரை – நெல்லு 

வயலில் உழுதுவரும் மாடு, 

அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, – இவை 

ஆதரிக்க வேணுமடி பாப்பா.


காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு 

கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு 

மாலை முழுதும் விளையாட்டு – என்று 

வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.


பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும் 

புறஞ்சொல்ல லாகாது பாப்பா, 

தெய்வம் நமக்குத்துணை பாப்பா – ஒரு 

தீங்குவர மாட்டாது பாப்பா. 


பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம் 

பயங்கொள்ள லாகாது பாப்பா, 

மோதி மிதித்துவிடு பாப்பா – அவர் 

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.


துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம் 

சோர்ந்துவிட லாகாது பாப்பா, 

அன்பு மிகுந்ததெய்வ முண்டு – துன்பம் 

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா. 


சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, – தாய் 

சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா, 

தேம்பி யழுங்குழந்தை நொண்டி, – நீ 

திடங்கொண்டு போராடு பாப்பா.


தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற – எங்கள் 

தாயென்று கும்பிடடி பாப்பா, 

அமிழ்தில் இனியதடி பாப்பா, – நம் 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.


சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, – அதைத் 

தொழுது படித்திடடி பாப்பா; 

செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் – அதைத் 

தினமும் புகழ்ந்திடடி பாப்பா. 


வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில் 

வாழும் குமரிமுனை பாப்பா, 

கிடக்கும் பெரியகடல் கண்டாய் – இதன் 

கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.


வேத முடையதிந்த நாடு, – நல்ல 

வீரர் பிறந்த திந்த நாடு, 

சேதமில் லாதஹிந்து ஸ்தானம் – இதைத் 

தெய்வமென்று கும்பிடடி பாப்பா.


சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத் 

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்; 

நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு 

நிறைய உடையவர்கள் மேலோர். 


உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; – தெய்வம் 

உண்மையென்று தானறிதல் வேணும்; 

வயிர முடைய நெஞ்சு வேணும்; – இது 

வாழும் முறைமையடி பாப்பா.


ஓடி விளையாடு பாப்பா என்று தொடங்கும் இந்த பாடல் நிச்சயம் தமிழர்களின் அனைத்து இல்லங்களிலும் ஒளிக்கக்கூடிய ஒரு பாடலாகும். சிறு பிள்ளைகளுக்கு நல்லதொரு சிந்தனையை வளர்க்க கூடிய இந்த பாடலை பாரதியார் எத்தனை சிந்தனையோடு எழுதி இருப்பர் என்று நினைத்தாலே வியப்பாக உள்ளது. காலங்கள் கடந்து நிற்கும் இந்த பாடல் நிச்சயம் இந்த உலகில் தமிழ் உள்ளவரை நிலைத்து நிற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


அச்சமில்லை அச்சமில்லை – பாரதியார் கவிதை


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், 

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே 

துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் 

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும் 

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 

இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், 

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே என்று தொடங்கும் இந்த பாடல் இன்று வரை பள்ளி குழந்தைகளின் அச்சத்தை போக்கும் ஒரு அற்புத பாடலாக உள்ளது. தமிழ் வழி கல்வியாக இருந்தாலும் ஆங்கில வழி கல்வியாக இருந்தாலும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கு இந்த பாடல் ஏதோ ஒரு சூழலில் நிச்சயம் தம் செவிதனில் கேட்டு பூரித்திருப்பர். இந்த பாடலை கேட்கும் சமயத்தில் சிறுவர்களின் மனதில் இனம் புரியாத ஒரு தைரியமும் தன்னம்பிக்கையும் மிளிரும். பாரதியின் கனவுகள் அனைத்தும் பிள்ளைகளின் கண்களில் பிரதிபலிக்கும். அந்த அளவிற்கு உணர்வுகளை உயிர்த்தெழ செய்யும் சக்தி இந்த பாடலுக்கு மாத்திரமே உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. வாழ்க பாரதியின் புகழ். வளர்க தமிழ்.


மனதில் உறுதி வேண்டும் – பாரதியார் கவிதை


மனதிலுறுதி வேண்டும், 

வாக்கினி லேயினிமை வேண்டும்; 

நினைவு நல்லது வேண்டும், 

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; 

கனவு மெய்ப்பட வேண்டும், 

கைவசமாவது விரைவில் வேண்டும்; 

தனமும் இன்பமும் வேண்டும், 

தரணியிலே பெருமை வேண்டும். 

கண் திறந்திட வேண்டும், 

காரியத்தி லுறுதி வேண்டும்; 

பெண் விடுதலை வேண்டும், 

பெரிய கடவுள் காக்க வேண்டும், 

மண் பயனுற வேண்டும், 

வானகமிங்கு தென்பட வேண்டும்; 

உண்மை நின்றிட வேண்டும். 

ஓம் ஓம் ஓம் ஓம்



அன்பு செய்தல் – பாரதியார் கவிதை


இந்தப் புவிதனில் வாழு மரங்களும் 

இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும் 

அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும் 

ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும் 

எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ?


(வேறு) 

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் 

வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும் 

வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள் 

வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ? 

யானெ தற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர் 

என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;

ஊனுடலை வருத்தாதீர்; 

உணவியற்கை கொடுக்கும்; 

உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!



ஆத்ம ஜயம் – பாரதியார் கவிதை


கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் 

கவர்ந்திட மாட்டாவோ?-அட 

மண்ணில் தெரியுது வானம்,அதுநம் 

வசப்பட லாகாதோ? 

எண்ணி யெண்ணிப் பல நாளு முயன்றிங் 

கிறுதியிற் சோர்வோமோ, 

விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் 

மேவு பராசக்தியே!

என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்

 எத்தனை மேன்மைகளோ! 

தன்னை வென்றா லவை யாவும் பெறுவது 

சத்திய மாகுமென்றே 

முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள் 

முற்றுமுணர்ந்த பின்னும் 

தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு

தாழ்வுற்று நிற்போமோ? 



காணி நிலம் வேண்டும் – பாரதியார் கவிதை


காணி நிலம் வேண்டும் – பராசக்தி 

காணி நிலம் வேண்டும், – அங்கு 

தூணில் அழகியதாய் – நன்மாடங்கள் 

துய்ய நிறத்தினதாய் – அந்தக் 

காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை 

கட்டித் தரவேண்டும்  அங்கு 

கேணியருகினிலே – தென்னைமரம் 

கீற்று மிளநீரும்.


பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்

 பக்கத்திலே வேணும் – நல்ல

 முத்துச் சுடர்போலே – நிலாவொளி

 முன்பு வரவேணும், அங்கு 

கத்துங் குயிலோசை – சற்றே

 வந்து காதிற் படவேணும், – என்றன்

 சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்

 தென்றல் வரவேணும். 


பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு 

பத்தினிப் பெண்வேணும் – எங்கள்

 கூட்டுக் களியினிலே – கவிதைகள்

 கொண்டுதர வேணும் – அந்தக்

 காட்டு வெளியினிலே – அம்மா!

 நின்றன் காவலுற வேணும், – என்றன்

 பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்

 பாலித்திட வேணும்.



காக்கை சிறகினிலே நந்தலாலா – பாரதியார் கவிதை


காக்கை சிறகினிலே நந்தலாலா – நின்றன்

கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

 பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்

 பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா – நின்றன்

கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னை

தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா



எத்தனை கோடி இன்பம் – பாரதியார் கவிதை


எத்தனை கோடி இன்பம் வைத்தாய் 

எங்கள் இறைவா இறைவா இறைவா! (எத்தனை)


சித்தினை அசித்துடன் இணைத்தாய் அங்கு

 சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய்

 அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்

 பல பல நல்லழகுகள் சமைத்தாய் (எத்தனை)


முக்தியென்ற்றொரு நிலை சமைத்தாய் – அங்கு

 முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்

 பக்தியென்றொரு நிலை வகுத்தாய் – எங்கள் 

பரமா பரமா பரமா


சுப்பிரமணிய பாரதியார் பொன்மொழிகள்







You can share this information with your contacts.

****You can read this and all other articles in 108 world languages by clicking the translate options on the left side 3 dots at the home page of our website.




Share this article link with your friends and relatives if you like it.


**இந்த கட்டுரையின் இணைப்பை நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


இப்படிக்கு,
ச.அ.சன்சனா.

Talents Infinite Talents. ( TIT )
“Be the change you want to see globally,”
OUR
WEBSITE: shorturl.at/dgtY5
YOUTUBE: shorturl.at/jMRZ7
EMAIL : talents.infinite.talents@gmail.com

TO JOIN US / CHAT WITH US: click the below link.
shorturl.at/CMNR1



"ஒளியாய் ஒளிர்வோம்"
" Let's Shine like a Light "


Comments