மனுமுறை கண்ட வாசகம் - இராமலிங்க அடிகளார்
மனுமுறை கண்ட வாசகம்
இராமலிங்க அடிகளார்
நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ?
வழிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ?
தானம் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ?
கலந்த சிநேகரை கலகம் செய்தேனோ?
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனோ?
குடி வரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ?
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ?
தருமம் பாராது தண்டம் செய்தேனோ?
மண்ணோரம் பேசி வாழ்வளித்தேனோ?
உயிர்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனோ?
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ?
பொருளை இச்சித்து பொய் சொன்னேனோ?
ஆசை காட்டி மோசம் செய்தேனோ?
வரவு போக்கு ஒழிய வழி அடைத்தேனோ?
வேலையாட்களுக்குக் கூலி குறைத்தேனோ?
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ?
இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்றேனோ?
கோள் சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ?
நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ?
கலங்கி ஒளித்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ?
கற்பிழந்தவளைக் களித்திருந்தேனோ?
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ?
கணவன் வழிநிற்போரைக் கற்பழித்தேனோ?
கர்ப்பம் அழித்துக் களித்திருந்தேனோ?
குருவை வணங்கக் கூசி நின்றேனோ?
குருவின் காணிக்கைக் கொடுக்க மறந்தேனோ?
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ?
பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ?
பஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனா?
கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைத்தேனோ?
ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ?
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ?
அன்புடையவர்க்குத் துன்பம் செய்தேனோ?
குடிக்கின்ற நீருள்ள குளம் தூர்த்தேனோ?
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழித்தேனோ?
பகை கொண்டு அயலோர் பயிரழித்தேனோ?
பொது மண்டபத்தைப் போயி இடித்தேனோ?
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ?
சிவனடியாரைச் சீறி வைத்தேனோ?
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ?
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ?
தெய்வமிகழ்ந்து செருக்கடைந்தேனோ?
என்ன பாவம் செய்தேனோ?
இன்னதென்று அறியேனே?
---- இராமலிங்க அடிகளார்
TALENTS INFINITE TALENTS (TIT).
“Be the change you want to see Universally,”
👉 YOUTUBE https://www.youtube.com/@TalentsInfiniteTalents
👉 EMAIL : talents.infinite.talents@gmail.com
👉 TO JOIN US / CHAT WITH US: https://chat.whatsapp.com/BwdkONnYBM2E8Yy3RSdvu9
👉 WHAT’S APP NUMBER: +91 8681095579
.png)
.jpeg)
.png)
.png)

Comments
Post a Comment